“குவியம் விருதுகள் 2023“ இல் அமரர் கேசவராஜாவுக்கு (திரைப்பட இயக்குனர்) உயரிய கௌரவம்!

287

ஈழத்தமிழ் சினிமாவுக்கான தனித்துவத்தையும் அடையாளத்தையும் வேண்டி ஓயாது பயணித்துக் கொண்டிருந்த வேட்கையாளன் அமரர் நவரட்ணம் கேசவராஜா அவர்கள் எம் சினிமாவுக்கு ஆற்றிய சேவையைக் கௌரவிக்கும் முகமாக குவியம் விருதுகள் 2023 இல் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

குவியம் மீடியாவின் ஏற்பாட்டில் நேற்று (13) யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற சினிமா கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவத்திலேயே இந்த உயரிய கௌரவம் வழங்கி வைக்கப்பட்டது. அமரர் கேசவராஜா சார்பாக அவரது துணைவியார் மற்றும் மகன் ஆகியோர் அந்த கௌரவத்தினை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிப்பாடல்கள் மற்றும் ஆவணப்படங்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டன. *இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு தொடர்பான முழுமையான புகைப்படங்கள் எமது உத்தியோகபூர்வ புகைப்பட்ட பங்காளரான ஸ்ரூடியோ ட்ரீம் வாரியஸின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும்.