சர்வதேச தர கிரிக்கெட் மைதானம், கலைஞர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான உதவி – யாழில் சந்தோஷ் நாராயணன்

345

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு எனவும் அது தொடர்பிலான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (24) வருகை தந்த சந்தோஷ் நாராயணன், மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களையும், தொடர்ந்து கலைஞர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ”யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த இசை நிகழ்வு முற்றிலும் இலவசமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினையும் நிகழ்வாக இருக்கும். அடுத்து வரும் நாட்களின் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்ந்து வரும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இசைத்துறை சார்ந்தவர்களையும் , எனது குழுவையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் நடாத்தும் இந்த இசை நிகழ்வும் இலங்கை தாண்டி வெளிநாடுகளில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு” என்றார்.

ஊடக சந்திப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற கலைஞர்கள் சந்திப்பிலும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்துரையாடியதுடன், தாயகக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் எம் கலைஞர்களின் வளர்ச்சிக்கு தான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

“யாழ் கானம்” என்ற பெயரில் ஒக்டோபர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாபெரும் இசை நிகழ்வில் இந்திய மற்றும் சர்வதேச இசைக்கலைஞர்களுடன் நம்மவர் ஒருவரும் நிச்சயம் மேடையேற்றப்படுவார். அவரை நீங்கள் தான் இனங்காட்ட வேண்டும் என்றும் கலைஞர்கள் மத்தியில் கோரிக்கை விடுத்தார்.