பங்கர் வாழ்வை படம் பிடித்துக் காட்டிய ஈழத்தின் ‘வெந்து தணிந்தது காடு’ – இன்று வவுனியாவில் ரிலீஸ்

281

மதிசுதா இயக்கத்தில் உருவான ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“ திரைப்படம் யாழ்ப்பாணத்தை தொடர்ந்து இன்று (19) வவுனியாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

வவுனியா – வசந்தி திரையரங்கில் இன்று மாலை 3.00 மணிக்கு திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் வவுனியாவில் மட்டும் திரையிடப்படும் இப்படம் எதிர்வரும் வாரம் வேறு இடங்களிலும் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க விரும்புபவர்கள் +94 77 348 1379 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு முற்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் குறித்த தங்கள் கருத்துக்களை / விமர்சனப்பார்வைகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வாறு ரொபின் என்பவர் தனது முகநூலில் பதிந்திருக்கும் விமர்சனத்தை இங்கே தருகின்றோம்.

வலிகளின் வாழ்விடமாகிப்போன ஈழத்தின் கதைகளை திரைப்படமாக்குவதென்பது அதன் யதார்த்தத்திற்கு பங்கமேற்படாமலும், வலிகளிலிருந்து மீண்டவர்களையும், மீண்டு கொண்டிருப்பவர்களையும் மீண்டும் மீண்டும் அந்த நினைவுச் சித்திரவதைக்குள் சிறைப்படாமலும், மண்ணுக்காய் மண்ணோடு மண்ணாய் மாண்டு போன மாவீரர்களின் உறக்கத்தை கலைக்காமலும் மிகக் கவனமாக திரைக்காவியமாக உருவாக்குவது மிகவும் சவாலானதொரு விடயமாகும்.

இவ்வாறானதொரு சவாலான விடயத்தை திரைப்படமாக்குதலென்பது ஈழத்தின் வலி நிறைந்த வாழ்வியலை தலைமுறை கடந்து எடுத்தியம்புவதற்கும், நமது கடந்த காலத்தின் வாழ்வியல் கூறுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், எதிர்கால சந்ததியினர் போர்க்கால வாழ்வியலை புரிந்து கொள்ளவதற்குமான ஆவணமாகவும் அமைகிறது. ஆனாலும் ஒரு திரைப்படத்தில் ஈழத்தின் அத்தனை கதைகளையும் எடுத்துரைத்திடல் மிகவும் சவால் நிறைந்ததுவே!

ஈழத்து திரைத் துறையில் அதீத ஈடுபாட்டுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிலரில் ஒருவரான மதிசுதா அவர்கள் 203 நபர்களிடம் சேகரித்த கூட்டு நிதி மூலம் 17 பாத்திரங்களினூடாக, ஐ போன் மூலமாக இவ்வாறானதொரு படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். தொலைபேசி மூலமாக இவ்வாறானதொரு முழுநீளத் திரைப்படத்தை படமாக்கியுள்ளமை சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு முன்னுதாரனமானதொரு எடுத்துக்காட்டாகும். தொலைபேசியை வினைத்திறனாக கையாண்டு காட்சிகளை கட்சிதமாக படம்பிடித்துள்ளமை ஒளிப்பதிவாளரின் திறமையை பறைசாற்றுவதோடு திரைப்படத்தின் வெற்றிக்கும் ஆணிவேராக அமைகின்றது.

செல்லடிச் சத்தங்கள், கிபிர் சத்தங்கள், வாகனங்களின் இரைச்சல்கள், சன்னங்கள் பாயும் சத்தங்கள், செல் விழுந்து மண் பொறியும் சத்தங்கள் என்பன மிக நுணுக்கமாக ஒலிக்கலவை செய்யப்பட்டுள்ளமை அந்தந்த காட்சிகளின் உணர்ச்சிகளை பார்வையாளர்கள் மீது தொற்றிக்கொள்ளச் செய்கிறது. போர்ச்சூழலில் இந்தச் சத்தங்கள் இன்னும் அதி பயங்கரமாகவே இருக்கும். படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காட்சியின் உணர்வலைகளையும் இணைக்கும் பாலமாய் பொருத்தமான இடங்களில், பொருந்தும் தன்மைமிகு இசையமைப்பும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

போர்க்கால பங்கர் வாழ்க்கை குறித்த முப்பது உண்மைக் கதைகளைத் தொகுத்து பங்கர் என்ற நூலாக வெளியிட்டிருந்தார் வெற்றிச் செல்வி அக்கா அவர்கள். அவரது தொகுப்பில் மதிசுதாவின் “ஈரச் சாக்கும் சக்கர வானமும்” என்ற கதையை இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாசித்த ஞாபகம் அந்தக் கதையில் வரும் காட்சியின் சிறு பகுதியை ஜம்பு, வண்டு, பார்வதி அம்மா போன்ற பாத்திரங்களூடாக கண் முன்னே பார்க்கக் கிடைத்தது. பங்கர் பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளைப் படித்தறிய ஆர்வமானவர்கள் “பங்கர்” புத்தகத்தை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். இன்னும் பல உண்மைக் கதைகள் உள்ளே கிடக்கிறது.

ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பங்கர் வாழ்வியலின் இன்னல்களையும், போர்க்கால கூட்டுக் குடும்ப வாழ்வியலின் பாசப் பிணைப்பினையும், போருக்குள்ளும் இழையோடிய காதல் கதையின் பகுதியையும், கவலைக்குள்ளும் கலகலப்பாய் சிரிக்க வைக்கும் சில நகைச்சுவை கலவைகளையும் வண்டு, ஜம்புலிங்கம் போன்ற பாத்திரங்களூடாக செப்பனிடப்பட்டிருக்கிறது.

திரையில் தோன்றிய அத்தனை பாத்திரங்களும் தத்தமது வகிபங்கினை செவ்வனே ஆற்றியுள்ளதோடு கதைக்கேற்ப வாழ்ந்திருக்கின்றமையும், யதார்த்தமான மொழி நடையும் பார்வையாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொள்கிறது. கதையின் ஆணிவேரான கிழவி திரைப்படத்தை தனது இயல்பான நடிப்பால் தாங்கிப் பிடித்திருப்பதோடு திரைப்படத்தின் நிறைவில் ஒலிக்கும் பாடல் இசையமைப்பின் செம்மையை இதயத்துள் பாய்ச்சுவதோடு, பார்வதியம்மாவின் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் இன்னும் இதயத்துக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆமி, இயக்கம், என்ற இரண்டு வார்த்தைகளைத் தாண்டி அதன் அரசியல் பற்றியோ, யுத்தத்திற்கான காரணம் பற்றியோ பேசப்படாமையே திரைப்படத்தினை இலங்கையில் வெளியிடுவதற்கான அனுமதியை பெற்றுத்தந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது. அதன் காரண காரியங்களை ஆராய்வதால் தீர்வெதும் கிடைத்திடப் போவதில்லையென்பது யதார்த்தமான உண்மையாகும்.

குப்பி, தகடு போன்ற பொருட்களின் மதிப்பையும், அதனை அணிந்துகொள்வதில் கொண்டிருந்த அலாதிப் பிரியத்தையும், மண் விடுதலையை விரும்பிய ஈழ மண்ணில் வாழ்ந்த மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒருபோதும் மறந்திடமாட்டார்கள்.

தேசப்பற்றுடன் மண் விடுதலைக்காய் குடும்பத்திலிருந்து ஒருவரை இயக்கத்துக்கு அனுப்பிய குடும்ப உறவுகள் பங்கருக்குள் புத்தரையும் வழிபட்டமை போருக்குப் பயந்து அவர்கள் நல்லிணக்கத்தை விரும்பியதன் வெளிப்பாடாக அல்லது பயக்கெடுதியில் அத்தனை கடவுளர்களையும் வழிபட்டதன் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தக் காட்சியின் அவசியம் திரைக்கதையாளருக்கே சரியாகத் தெரியும். யுத்தம் தொடர்பான அனுபவத்தையோ, அறிவையோ கொண்டிராத இன்றைய தலைமுறை சில வேளைகளில் பிழையான அரசியற் கற்பிதங்களை புரிந்துகொள்ளாமலிருத்தல் அவரவர் மனநிலைகளையும், உணர் திறனையும் பொறுத்தது.

வன்முறைக் கலாச்சாரத்தின் விதைகளை அள்ளி எறியும் தென்னிந்திய சினிமா மோகத்துக்குள் சிக்கித் தவிக்கும் நமது இளைய தலைமுறையினர் இவ்வாறான எமது ஈழத்துப் படைப்புக்களை பார்ப்பதற்கும், ஆதரவு நல்குவதற்கும் முன்வரவேண்டும். ஈழத்து திரை முயற்சிகள் தனித்துவம் மிக்கதாக மிளிர்வதற்கு ஈழத்து திரைமுயற்சியாளர்களின் கூட்டிணைவு மிகவும் அவசியமானதாக உணரப்படுவதை சமூக வலைத்தளங்களும், ஈழத்துத் திரைச் செயற்பாட்டாளர்களது அண்மைக்காலப் படைப்புக்களும், பகிர்தல் வெளிகளும் பறைசாற்றுகின்றன. கூட்டு முயற்சியும், கூட்டுழைப்பும் ஒருவரையொருவர் முன்தள்ளி, ஈழத்து திரைத்துறையில் புதிய மலர்ச்சி மலர அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

“விசம் குடிச்சா விழுந்துதான் சாவியள் ஆனா சைனட் அடிச்சா செத்துத்தான் விழுவியள்”…

எழுதியவர் – வ.றொபின் புன்னாலைக்கட்டுவன் (19-02-2023)