இயக்குனர் மதிசுதாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியீடு

188

ஈழ சினிமா பரப்பில் பெரும் பேசுபொருளாக தற்போது வரை விளங்கி வரும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை இயக்கிய மதிசுதா தனது புதிய படம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

“அருள் வேல் காக்க” எனப்பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ஆற்றங்கரை வேலனின் அற்புதம் சொல்லும் படைப்பு எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தொண்டமான் ஆற்றங்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சந்நிதி முருகன் ஆலயத்தை அடியொற்றியே இந்தக் கதை இருக்கப்போகின்றது என்பது முதற்பார்வையிலேயே புரிகின்றது.

இப்படம் படம் குறித்து மதிசுதா தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிந்துள்ளார்.

ஒரு மனிதனுக்குத் தெரிந்த அறிவும் கலையும் அவன் வாழும் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்பட வேண்டும். எனக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட இந்த அறிவைப் பெற நான் எத்தனை மணித்தியாலங்களைச் செலவளித்திருக்கிறேன் என்பது என்னுடன் இருப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.

ஆன்மீகம் என்பது என் பிறப்பிலிருந்து என்னோடே பயணித்தது மட்டுமல்லாமல் என்னை உயிருடன் வைத்திருப்பதும் அது தான். நான் அம்மா வயிற்றில் 7 மாதமாக இருக்கும் போது சந்நிதி முருகனில் தங்கியிருந்த எனது அம்மா கோப்பி மட்டும் குடித்து கந்தசஷ்டி விரதம் இருந்தாராம்.

கடந்த சில மாதங்களாக என்னைச் சுற்றிப் பின்னப்பட்ட சதி, துரோகம் போன்ற பின்னல்களில் இருந்து தனியாளாகப் போராடிய எனது தனிமைப் போராட்டத்தின் பல மணித்தியாலங்கள் சந்நிதி கோயிலில் இருந்தே நடந்தது.

எல்லோரும் சொல்வீர்களே தாயின் கருவறையில் இருக்கும் அமைதி என்று, அவையனைத்தையும் அங்கு தங்கியிருந்த நாட்களில் நான் முழுமையாக உணர்ந்திருக்கின்றேன். எனக்கு தெரிந்த இந்தக் கலையை ஆன்மீகத்தினூடாகவாவது எனது சமூகக் கடமையை நிறைவேற்றும் முயற்சியில் இப்படத்தை ஆரம்பித்தேன்.

அங்கிருந்த நாட்களில் 3 அற்புதங்களைக் கொண்டு நான் எழுதிய திரைப்படத்திற்கான கதையில் எனக்கிருக்கும் வசதியைக் கொண்டு முதல் கதையை மட்டும் ஆரம்பிக்கிறேன். முருகன் நினைப்பதே என் வாழ்வில் நடக்கின்றது. குறும்படமாக வர வேண்டுமா ? திரைப்படமாக வர வேண்டுமா என ஆற்றங்கரையானே தீர்மானிக்கட்டும்.

இப்படைப்பில் பணியாற்றச் சந்தர்ப்பம் கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இது எனக்கு நெருங்கிய நண்பர்கள் என் மீது கொண்ட மதிப்பிலும் அன்பிலும் இலவசமாக என்னுடன் பணியாற்றும் படைப்பாகும். அத்தனை பேரது சம்பளமும் படத்தை வாங்கும் யாராவது தரும் காசில் தான் கொடுக்கப்படும். அதற்கு தயாரானவர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.